கடலுார் மாவட்டத்தில் குரூப்- 2 தேர்வு 49 மையங்களில் 22,164 பேர் எழுத ஏற்பாடு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வை 22,164 பேர் எழுத உள்ளனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-2, குரூப்-2 ஏ, தேர்வு வரும் 28ம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது. தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு வருகை புரிய வேண்டும். கூடுதலாக காலை 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். 9:00 மணிக்கு பிறகு வருகை புரியும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதியில்லை. தேர்வர்கள் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வுக்கூடத்திற்கு கொண்டு வர வேண்டும். கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய வருவாய் வட்டங்களை சேர்ந்த 49 தேர்வு மையங்களில் 74 தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டு 22,164 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறுவதை பார்வையிட 79 வீடியோக்கள் ஒளிப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.