உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 1 கோடி கேட்டு ஆடிட்டர் கடத்தல்; கடலுாரில் பெண் உட்பட 4 பேர் கைது: மகனின் நண்பர்களே ஈடுபட்டது அம்பலம்

ரூ. 1 கோடி கேட்டு ஆடிட்டர் கடத்தல்; கடலுாரில் பெண் உட்பட 4 பேர் கைது: மகனின் நண்பர்களே ஈடுபட்டது அம்பலம்

கடலுார்: ரூ . 1 கோடி கேட்டு ஆடிட்டரை காரில் கடத்திய பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர், சங்கர நாயுடு தெருவை சேர்ந்தவர் பூவராகவன்,62; தனியார் நிறுவன ஆடிட்டர். இவர், கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்து சென்னைக்கு பைக்கில் திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த எண்டியூர் என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பூவராகவனை வழிமறித்து, காரில் கடத்தி சென்றனர். உடன், அவரது மகன் ஹரிஷ் கேசவை மொபைலில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், பூவராகவனை கடத்தியதாகவும், 1 கோடி ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறினர். அதிர்ச்சியடைந்த ஹரிஷ் கேசவ், வங்கி லாக்கரில் இருந்து 315 கிராம் தங்க கட்டியை, மர்ம நபர்கள் கூறிய குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரிக்கரை பகுதிக்கு எடுத்து சென்றார். அங்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்துவிட்டு, தந்தையை மீட்டு வந்தார். இதுகுறித்து பூவராகவன் அளித்த புகாரின் பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், மர்ம நபர்கள் 5 பேர் மீது சட்ட விரோதமாக கடத்தல், கூட்டுக்கொள்ளை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., ரூபன்குமார் மேற்பார்வையில், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், ஹரிஷ் கேஷவ் நண்பர்களான, திருப்பாதிரிப்புலியூர் தானம் நகரை சேர்ந்த வேலன் மகன் அஜித்,24; முதுநகர் சுனாமி நகர் சதீஷ்குமார், 40; நாணமேடு மேற்கு தெரு வினோத் ராஜ், 34; வசந்தராயன்பாளையம் ரேணுகா, 40; ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இனோவா கார், மொபைல் போன்கள், முகமூடி, டேப், கத்தி மற்றும் 315 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 35 லட்சம் ரூபாய். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தலைமறைவான விஜயகிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை