வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்கள் பழம் பழுக்க சாயம் போடுறீங்க அதனாலதான் மக்கள் பூவன் பழத்தை சாப்பிடுவதில்லை. மாடுகூட சாப்பிடுவிடுவதில்லை.
கடலுார், ஆக. 20- கடலுார் மாவட்டத்தில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில், வழிசோதனைப்பாளையம், கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், அரசடிக்குப்பம், புலியூர், சமட்டிக்குப்பம், வசனாங்குப்பம், சின்னதானங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு, வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் ஆண்டுதோறும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழையின் அனைத்து பொருட்களும் நாம் பயன்படுத்தி வருகிறோம். அதாவது இலை, பூ, காய், தண்டு போன்ற அனைத்தும் பயன்படுத்தக் கூடிய பொருட்களாகும். ஒரு ஆண்டு பயிர் என்பதாலும் ஒரே நேரத்தில் மொத்தமாக பணம் கிடைப்பதாலும் வாழை பணப்பயிராக கருதப்படுகிறது. இதன் வயது 14 மாதங்களாகும். அதனால்தான் வாழை பயிருக்கு அதிகப்படியான விவசாய கடன் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் கடலுார் மாவட்டத்தில் பூவன், ஏலக்கி, கற்பூர வல்லி, செவ்வாழை, ரஸ்தாளி, நேந்திரம் போன்ற வகைகள் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தற்போது வாழை மரம் நன்கு வளர்ந்து குலை தள்ளி அறுவடைக்கு தயாராகி வருகிறது. கடலுாரில் இருந்துதான் அதிகளவு சென்னைக்கு வாழைத்தாரை வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிர் செய்தாலும் சென்னைக்கு எடுத்துச்செல்ல வாகன வாடகை அதிகம் என்பதால் கடலுாரில் இருந்து அதிகளவு வாழை கொள்முதல் செய்யப்படுகிறது. வாழைத்தாரின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு முன்பு 500 ரூபாய்க்கு மேல் விலை போன பூவன் பழம் தார் 175 ரூபாய்க்கும் கீழ் விலை போகிறது. நிலத்தில் செவ்வாழை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானது. இது தற்போது, 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 50க்கு விற்பனையான நேந்திரம் 20 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து எஸ்.புதுார் விவசாயி சின்னதம்பி கூறுகையில், 'ஆடி மாத திருவிழா காலங்களில் அதிகளவு பூவன் பழத்தை மக்கள் பயன்படுத்துவது வழக்கம். அதனால், எப்போதுமே இந்த மாதத்தில் பூவன் பழம் விலை உயர்ந்திருக்கும். ஆனால் நிலைமை வேறுவிதமாக மாறியுள்ளது. பூவன் பழத்தை மக்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக நேந்திரம், ஏலக்கி, செவ்வாழை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். அதனால் பூவன் பழம் கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயக் கடனை எப்படி அடைப்பது என்றே தெரியவில்லை' என்றார்.
நீங்கள் பழம் பழுக்க சாயம் போடுறீங்க அதனாலதான் மக்கள் பூவன் பழத்தை சாப்பிடுவதில்லை. மாடுகூட சாப்பிடுவிடுவதில்லை.