தடுப்பு கட்டையில் பைக் மோதல்: பிளம்பர் பலி
பாகூர்: தடுப்பு கட்டையில் பைக் மோதிய விபத்தில் பிளம்பர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டம் நாகம்மாள்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் மகன் சிற்றரசு, 21; பிளம்பர். இவர் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரியில் உள்ள தனது முதலாளியிடம் தீபாவளி போனஸ் வாங்கிக் கொண்டு, நண்பர் பகத்சிங்,24; என்பவருடன், தனது பஜாஜ் டியூக் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் மசூதி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டை மற்றும் மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிற்றரசுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர். பகத்சிங் சிகிச்சை பெற்று வருகின்றார். கிருமாம்பாக்கம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.