ஓடும்போது சிமெண்ட் லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு
கடலுார்: கடலுார் அருகே சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து சீர்காழி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிய லாரி ஒன்று, நேற்று அதிகாலை 3:30 மணியளவில் கடலுார் வழியாக சென்றது. கடலுார் அடுத்த அன்னவல்லி பைபாஸ் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, லாரி டயரில் இருந்து புகை கிளம்பி சிறிது நேரத்தில் தீப்பற்றியது. அது மேலும் பரவியதால், லாரி டிரைவர் லாரியை ஓரம் கட்டினார். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. தீ விபத்திற்கான காரணம் குறித்து கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.