பிரசவ வார்டில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
திட்டக்குடி: திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மேற்கூரையின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 15 டாக்டர்கள், 17 செவிலியர்கள், 4 மருந்தாளுனர்கள் மற்றும் சித்த மருத்துவ டாக்டர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பிரசவ வார்டுகள் என தனித்தனியே உள்ளன.இங்கு 96 படுக்கை வசதிகள் உள்ளன . மருத்துவமனை வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரசவ வார்டு மேற்கூரையின் சிமென்ட் காரை நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் திடீரென பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில் லை. தகவலறிந்து வந்த தலைமை மருத்துவர் (பொறுப்பு) சேபானந்தம் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்த பகுதியை பார்வையிட்டு, புதிதாக கான்கிரீட் பூச நடவடிக்கை எடுத்தார். திட்டக்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.