பெருமாத்துார் நெல் சேமிப்பு கிடங்கில் மத்தியக்குழு ஆய்வு
புவனகிரி: மத்திய அரசின் தானியங்கி சேமிப்பு ஆராய்ச்சி உதவி இயக்குனர் தலைமையிலான மத்தியக்குழுவினர், புவனகிரி பெருமாத்துார் நெல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்தனர். கடலுார் மாவட்டம் புவனகிரி பெருமாத்துாரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், குறுவை சாகுபடியில் கொள்முதல் செய்த 7 ஆயிரம் நெல் மூட்டைகளை, குடேனில் வெளியேற்ற முடியாமல் தேக்கி வைத்துள்ளனர். மேலும் விற்பனைக்காக பதிவு செய்துள்ள விவசாயிகள் ஆயிரம் மூட்டை கொட்டி இடம் பிடித்து காத்துள்ளனர். போதிய இடவசதி இல்லாததால் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் நெல் மணிகள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் நெல் குடோன்கள் உள்ளிட்ட பகுதியில் ஐந்து மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய அரசின் தானியங்கள் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் பிரீத்தி தலைமையில் மத்திய குழுவினர், புவனகிரி பெருமாத்துார் குடோன் மற்றும் கொள்முதல் பகுதியில் ஆய்வு செய்தனர். நெல் மாதிரிகளை சேகரித்ததுடன், நெல் ஈரப்பதங்களையும் சோதித்து ஆய்வு செய்தனர். இதில் தமிழக அரசின் நெல்கொள்முதல் நிலையத்தின் தரக்கட்டுப்பாட்டு சீனியர் அலுவலர் உமாமகேஸ்வரி, மண்டல மேலாளர் கமலம், கோட்ட மேலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.