வேலை வாங்கித்தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடி சென்னை ஆசாமி கைது
கடலுார்: கடலுாரில், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, 5.50 லட்சம் ரூபாயை மோசடி செய்த சென்னை நபரை, கைது செய்தனர்.கடலுார் அருகே சுப்ரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 42 ; ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். அவருக்கு கடந்த 2022ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த பாஸ்கர்,58; என்பவர் அறிமுகமானார். சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய நபர்களுடன் நெருக்கமான நட்பில் உள்ளது போல் அந்த நபர் காட்டிக்கொண்டார். அதை நம்பிய நாகராஜ், தனது மனைவி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு கிராம உதவியாளர் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் வேலை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.அதற்கு பாஸ்கர், 7 லட்ச ரூபாய் பணம் கேட்டார். அதன்படி, 6 தவணைகளில் 5.50 லட்சம் ரூபாயை பாஸ்கரிடம் நாகராஜ் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய பாஸ்கர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார்.இதுகுறித்து, கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த பாஸ்கரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.