முதல்வர் அதிரடி நடவடிக்கை சிதம்பரம் நிர்வாகிகள் ஷாக்
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., தற்போதே தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து, தேர்தல் பணிக்கு தயார்படுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார். நேரடியாக முதல்வரை சந்திக்க சென்ற நகரம், ஒன்றியம், பேரூராட்சி நிர்வாகிகள் ஒரு வித பதட்டத்துடனேயே உள்ளே சென்றனர். உள்ளே சென்ற நிர்வாகிகளை பெயர் சொல்லி அழைத்து பேசினார் முதல்வர். நிர்வாகிகள், உள்ளே நுழைவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட நபர்களின் அனைத்து தகவல்கள் அடங்கிய 'பைல்' முதல்வர் கையில் கொடுக்கப்பட்டதாம். அதில் நிர்வாகி சரியாக கட்சி பணி செய்கிறாரா; அவரது ஒன்றியத்தில் அவருக்கான நற்பெயர்; மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள செல்வாக்கு; அதிருப்தி என ஒவ்வொரு தரவுகளையும் கையில் வைத்துக் கொண்டே பேசினாராம். இதனால், நிர்வாகிகள் பலர் முதல்வர் முன்பு உட்காரவே அச்சத்தில் இருந்தனர். ஆனாலும் அவர்களை அமர வைத்தே பேசினார். இதில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில், நல்ல பெயர் உள்ள நிர்வாகிகளை பாராட்டியும், சரியில்லாத நிர்வாகிகள் மீது கோபத்தையும் வெளிப்படுத்தினார். குறிப்பாக, சில நிர்வாகிகளை, அவரவர் பகுதியில் கட்சி பொறுப்புகளை வைத்துக்கொண்டு செய்த அத்துமீறல்கள் பற்றி அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். இனியாவது மக்களுக்கும் கட்சிக்காகவும் பணியாற்ற வேண்டுமென, எனக் கூறியதை கேட்டு நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்து போனதுடன், வாடிய முகத்துடன் வெளியே வந்தனர். அதே வேளையில் நல்ல பெயர் எடுத்த நிர்வாகிகளை பாராட்டு தெரிவித்து, மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என மகிழ்ச்சியாக அனுப்பியும் வைத்துள்ளார். முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள் சில மகிழ்ச்சியில் இருந்தாலும், ஒரு சிலர் உள்ளே நடந்ததை வெளியே செல்ல முடியாமல் மவுனமாகவே உள்ளனராம்.