சிறுவர்கள் டூ வீலர்கள் ஓட்டுவதால் விபத்து அபாயம்: பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கடலுார்: சிறுவர், சிறுமியர் டூ வீலர், கார் போன்ற வாகனங்களை இயக்கி வருவதால் அதிகரிக்கும் வாகன விபத்தைதவிர்க்க அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாளுக்கு நாள் மாறி வரும் நாகரீக உலகில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது மக்கள் இரு சக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மாணவ, மாணவியர்கள், பள்ளி, கல்லுாரி செல்வதற்கும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. துவக்க காலத்தில் தமது பிள்ளைகள் டூ விலர்களை ஓட்டுவதை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்களின் கண்டிப்பு குறைந்ததால் சிறுவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும் வாகனத்தில் செல்கின்றனர். சிறுமிகள், பெண்களும் இதில் விதிவிலக்கல்ல. இவர்களுக்கு டூ வீலர், கார் போன்ற வாகனங்கள் எப்படி ஓட்ட வேண்டும் என்கிற அடிப்படை விதிமுறையே தெரியாது. சாலையில் இக்காட்டான சூழ்நிலை வரும்போது இவர்களால் கண்ட்ரோல் செய்து நிறுத்த முடியாமல், எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர். இதை கட்டுப்படுத்த மத்திய அரசு 18 வயதிற்கு கீழ் சிறுவர், சிறுமியர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம், அல்லது விபத்து ஏற்படுத்திய பிள்ளையின் தந்தை அல்லது பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கபடுவர் என கடும் சட்டம் கொண்டுவந்துள்ளது. இச்சட்டத்தை சரிவர நடைமுறைபடுத்தாததால் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தற்போது, தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரத்தில் நேற்று முன்தினம் 17 வயது சிறுவன் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக அவரது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேப்போல கடலுார் மாவட்டத்திலும் லைசன்ஸ் இல்லாமல் ஏராளமான சிறுவர், சிறுமியர், வயதானவர்கள் வாகனம் ஓட்டி வருகின்றனர். லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறுவர்கள், சிறுமிகளின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர், சிறுமியர் ஏற்படுத்தும் வாகன விபத்து குறையும்.