சில்வர் பீச் கடைகளை இடம் மாற்ற வியாபாரிகளுடன் ஆலோசனை
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், கடைகள் இடமாற்றம் செய்வது தொடர்பாக வியாபாரிகளுடன், கமிஷனர் ஆலோசனை நடத்தினார்.கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.அதையடுத்து, அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக, அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் அனு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கமிஷனர் அனு பேசுகையில், சென்னை மெரினாவிற்கு அடுத்தப்படியாக கடலுார் சில்வர் பீச் உள்ளது. இந்த பீச்சில் தற்போது அழகுப்படுத்தும் பணிகள் நடப்பதால், கடைகள் இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், கடைகளை இடமாற்றம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றார்.அப்போது வியாபாரிகள் கூறுகையில், கடை அடிக்கடி இட மாற்றம் செய்வதால் எங்களுக்குசெலவுகள் அதிகளவில் ஏற்படுகிறது. இதற்கு மின் இணைப்பு வழங்க 20 ஆயிரத்துக்கும்மேல் செலவு ஏற்படுகிறது. நாங்கள் பாதுகாப்பாக வியாபாரம் செய்ய பாதுகாப்பு கொடுங்கள். மக்கள் நலன் கருதி எந்த திட்டமும் செயல்பட வேண்டும். மாற்று இடம் குறித்து வியாபாரிகள் கலந்து பேசி கூறுகிறோம். கால அவகாசம் வேண்டும் என்றனர். அவர்களுக்கு பதிலளித்த கமிஷனர், வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் எந்த பிரச்னையும் வராது, மாற்று இடம் குறித்து விரைவில் முடிவை கூறுங்கள் என்றார்.