உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநகராட்சியுடன் இணையும் கிராமங்கள் 13 ஆக... நிலங்களாக இருப்பதால் 6 ஊர்களுக்கு விலக்கு

மாநகராட்சியுடன் இணையும் கிராமங்கள் 13 ஆக... நிலங்களாக இருப்பதால் 6 ஊர்களுக்கு விலக்கு

கடலுார்: கடலுார் மாநகராட்சியுடன் இணையும் கிராமங்கள் 19ல் இருந்து 13 ஆக குறைக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களாக இருப்பதால் ஆறு கிராமங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடலுார் நகராட்சி, கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியின் மக்கள் தொகை இரண்டு லட்சமாகவும், பரப்பளவு 27.65 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது. பரப்பளவை அதிகரிக்க அருகில் உள்ள பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, குண்டு உப்பலவாடி, பச்சையாங்குப்பம், குடிகாடு, கடலுார் முதுநகர், கரையேறவிட்டக்குப்பம், அரிசி பெரியாங்குப்பம், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், தோட்டப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு, மருதாடு, வெள்ளப்பாக்கம், காரைக்காடு, செம்மங்குப்பம், சேடப்பாளையம் ஆகிய 19 கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 23.9.2021ல் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், முதல்கட்டமாக சேடப்பாளையம், காரைக்காடு ஆகிய கிராமங்கள் விலக்கி கொள்ளப்பட்டன. மீதமுள்ள 17 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகள் துரிதமாக நடந்தன. இதற்கிடையே இணையவுள்ள கிராமங்கள் வழிகாட்டி மதிப்பு உயர்த்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பலர் மாநகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க வேண்டாமென, போர்க்கொடி துாக்கியுள்ளனர். இந்நிலையில் பல கிராமங்களை சுற்றியும் விவசாய நிலங்கள் அதிகளவில் இருப்பதால் மாநகராட்சியுடன் சேர்க்கைக்கு உகந்ததல்ல என முடிவு செய்யப்பட்டது. இதனால், அரிசிபெரியாங்குப்பம், கரையேறவிட்டக்குப்பம், குடிகாடு, பச்சையாங்குப்பம், திருவந்திபுரம், கடலுார் முதுநகர், குண்டு உப்பலவாடி, கோண்டூர், மருதாடு, நத்தப்பட்டு, பாதிரிக்குப்பம், பெரியகங்கணாங்குப்பம், தோட்டப்பட்டு, ஆகிய கிராமங்கள் இணைக்கப்படவுள்ளன. மீதமுள்ள நாணமேடு, உச்சிமேடு, வெள்ளப்பாக்கம், காரைக்காடு, செம்மங்குப்பம், சேடப்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. மாநராட்சியுடன் இணையும் 13 கிராமங்கள் அரசிதழில் வெளியாகியுள்ளது. இக்கிராமங்களில் மகாத்மா காந்தி நுாறு நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக நேற்று பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த சின்னகங்கணாங்குப்பம், கொமந்தான்மேடு ஆகிய கிராம பெண்கள் நெல் நாற்றுடன் குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்வதாக கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ