கடலுார் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் பதிவு
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொது மக்கள் புழுக்கத்தினால் அவதியடைந்தனர்.தமிழகத்ததில் ஏப்ரல் மாதம் துவக்கத்தில் இருந்து வெயில் கொளுத்தியது. அதைத் தொடர்ந்து வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை திசை மாறியதால் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் குழந்தைகள், வயதானவர்கள் அவதியடைந்தனர். பொதுமக்கள் குளிர்பான கடைகளில் குவிந்தனர். மாலை 5:00 மணிக்குப் பின்பே வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. கடலுார் மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச வெப்ப நிலை 102.56 டிகிரி பதிவானது. இந்தாண்டு கோடை வெயிலில் இதுவே அதிகபட்ச வெயிலாகும்.