மரக்கன்று நடுவது அவசியம் கடலுாரில் ஐகோர்ட் நீதிபதி சுந்தர் அறிவுரை
கடலுார் : கடலுார், புதுக்குப்பத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட உதவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை தாங்கினார். சென்னை ஐகோர்ட் சொத்து பாதுகாப்பு (பொறுப்பு) ஆட்சியர் லிங்கேஸ்வரன், சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் சுதா முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட் நீதிபதியுமான சுந்தர், 68 பயனாளிகளுக்கு 15.35 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ஜெயக்குமார், மாநகர கமிஷனர் அனு, சாக்ஸம் தமிழ்நாடு மாநில தலைவர் சபஷ்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஐகோர்ட் நீதிபதி சுந்தர் பேசுகையில், 'அனைவருக்கும் நியாயம் கிடைக்க கடந்த 1987ல் சட்டப் பணிகள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அமெரிக்காவில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவர், தேர்வு எழுத உதவியாளர் வேண்டும் என கோர்ட்டை நாடினார். இவரது கோரிக்கையை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது. இவ்வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வரலாற்று தீர்ப்பாக எளியவர்களுக்கும் சமநீதி வழங்க வேண்டும் என, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.இதையடுத்து பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி அமெரிக்காவில் சட்ட வல்லுநராக திகழ்ந்தார். வாகனங்கள் பெருக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வெப்பமயமாதல் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக உள்ளது. இதனை எதிர்கொள்ள அதிக மரங்கள் வளர்ப்பது முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.