ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி மனைவி நித்யா, 23. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், இவருக்கு நேற்று பகல் 2:00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடன், அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர். அப்போது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை அழைத்துக்கொண்டு, விருத்தாசலம் மருத்துவமனை நோக்கி சென்றபோது, அவருக்கு அதிக வலி ஏற்பட்டது.அப்போது, ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், நித்யாவிற்கு பிரசவம் பார்த்தார். அதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கிருஷ்ணன் ஆகியோரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.