ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார கோரிக்கை
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் அருகே உள்ள பாண்டியன் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் அருகே பாண்டியன் ஏரி அதிக பரப்பளவு கொண்டுள்ளது. விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாண்டியன் ஏரி சோழத்தரத்தில் துவங்கி வலசக்காடு சின்ன பாண்டியன் ஏரி வரை 2 கிலோ மீட்டர் துாரம் உள்ளது.மழை,வெள்ளக்காலங்களில் ஏரி நீர் பிடிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியிலிருந்து வடியும் நீர் வாய்க்காலில் சென்று சோழத்தரம் அருகே வீராணம் ஏரியில் கலக்கிறது. பாசன மற்றும் வடிகாலாக பயன்படக்கூடிய வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ள நிலையில் மழை,வெள்ளக்காலங்களில் தண்ணீர் வயல்களில் சூழ்கிறது. வாய்க்காலின் இருபுறமும் உள்ள நிலத்திற்கு சொந்தமான நபர்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். வாய்க்காலை பராமரிக்க கூடிய பொதுப்பணித்துறையினர் பெயரளவில் கூட கண்டுகொள்ளவில்லை.இதனால் மழை வெள்ளக்காலங்களில் வடிகால் தடைப்பட்டு பயிர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன.பாண்டியன் ஏரி வடிகால் வாய்க்காலை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.