உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஸ்டாலின் முதல்வராக சபரிமலைக்கு யாத்திரை: விருதையில் தி.மு.க., நிர்வாகிகள் லக..லக...

 ஸ்டாலின் முதல்வராக சபரிமலைக்கு யாத்திரை: விருதையில் தி.மு.க., நிர்வாகிகள் லக..லக...

விருத்தாசலம்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை சர்ச்சையாக்கிய தி.மு.க.,வினர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டி சபரிமலைக்கு மாலை அணிந்து புறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் ஸ்கந்தர் மலை மீது பா.ஜ., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இணைந்து, ஹிந்து மக்களின் வழிபாட்டு முறையை தடுக்கக் கூடாது என வலியுறுத்தி கார்த்திகை தீபம் ஏற்ற முயன்றனர். ஆனால், ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவையும் பொருட்படுத்தாமல், தி.மு.க., அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து, அவர்களை தடுத்து நிறுத்தியது. இது ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியது. இந்நிலையில், கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் தி.மு.க., சுற்றுச்சூழல் அணி சார்பில் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டி, சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த நிர்வாகிகள் சிலர், நேற்று காலை 10:00 மணியளவில், இருமுடி கட்டி, புறப்பட்டனர். பாலக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி அணிந்த அவர்கள், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற டிஜிட்டல் பேனரை கையில் ஏந்தியபடி புறப்பட்டனர். இவர்களை, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனின் மகனும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி ஒருங்கிணைப்பாளருமான வெங்கடேசன், பேனரை கையில் ஏந்தியவாறு அவர்களை வழியனுப்பி வைத்தார். அமைச்சர் கணேசனும், அவரது மகனும் தீவிர கடவுள் பக்தி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பழங்கால துாண் மீது தீபம் ஏற்றுவதை தடுத்த தி.மு.க., அரசும், அக்கட்சி நிர்வாகிகளும்; பிற மாநில கோவில்களுக்கு மாலை அணிந்து செல்வதை மட்டும் ஏற்கலாமா? உள்ளூரில் வழிபட வேண்டாம்; பிற மாநிலங்களுக்கு செல்லுங்கள் என வழியனுப்பி வைக்கிறீர்களா! என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி