கிழக்கு கோபுர சாலை ஒருவழி பாதையானது
விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தகிரீஸ்வரர் கோவில் சன்னதி வீதி சாலை, ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷம், கிருத்திகை, அஷ்டமி, பவுர்ணமி உள்ளிட்ட வழிபாடுகள், ஆடிப்பூரம், மாசிமகம் உட்பட ஆண்டுதோறும் திருவிழாக்கள் விசேஷமாக நடக்கிறது. வேப்பூர் நெடுஞ்சாலையில் உள்ளதால், கோவிலை சுற்றியுள்ள நான்குமாட வீதிகள் வழியாக பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.கோவிலின் பிரதான கிழக்கு கோபுர வாசலில் பக்தர்களின் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால், வேப்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. அப்போது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.பின்னர், கிழக்கு கோபுர வாசல் அமைந்துள்ள சன்னதி வீதியில் ஒருவழிப்பாதையாக மாற்றி, அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது. மேலும் கோவில் வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது.