திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் கல்வி ஆலோசகர் அஸ்வின் அறிவுரை
கடலுார் : அனைத்து மாணவ, மாணவிகளும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென, 'தினமலர்' இன்ஜினியரிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார். 'தினமலர்' நாளிதழ் சார்பில் கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது: இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் வெளிப்பாடு, ஒன்று வேலைக்கு செல்வது; மற்றொன்று மற்றவர்களுக்கு வேலை கொடுப்பது. வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் கம்பெனிக்கு வேலை ஆட்கள் தேர்வானது, சிறந்த கல்லுாரிகளுக்கு சென்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்யும் முறை இருந்தது. இப்போது பிராண்ட், டாப் கல்லுாரியில் படிக்கிறீர்கள் என்ற காரணி இருக்காது. தனிப்பட்ட மாணவர் திறமை மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். எ.ஐ.சிடி.இ., அமைப்பு ஒரு இன்ஜினியரிங் படித்தவர்கள் 160 கிரிட்ஸ் பெற வேண்டும். உலக அளவில் கல்லுாரிகளில் இருப்பதைப் போன்று இந்தியாவிலும் மாணவர்களுக்கு திறமை இருந்தால் இன்ஜினியரிங் படிப்பை இரண்டு ஆண்டுகளில் படித்து முடித்துக் கொள்ளலாம் என அரசு கூறி வருகிறது. தற்போது கூட சில அட்டானமஸ் கல்லுாரிகளில் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில் திறமை வளர்க்கும் வகையில் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து விடுகின்றனர். மூன்றாம் ஆண்டு பிளேஸ்மெண்ட் தான். இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வு முடிந்தவுடன் அனைத்து மாணவர்களும் வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளது. இதனை மற்ற கல்லுாரிகளும் பின் பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முதலீடு செய்யும் காலம். இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர விண்ணப்பித்துள்ள 2,40,000 விண்ணப்பங்களில் 90,000 விண்ணப்பங்கள் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் விண்ணப்பித்ததாகும். இதனால் மூடிக்கிடந்த இன்ஜினியரிங் கல்லுாரிகள் எல்லாம் தற்போது, திறந்து வைத்துள்ளனர்.ஏன் என்றால் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்ஜினியரிங் சேர அரசு கல்லுாரிகளுக்கு கட்டணமாக ரூ.55,000, விடுதி கட்டணம் ரூ.1,00,000 என வழங்குகிறது. இதனை பெறுவதற்காகவே மூடிக்கிடந்த கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திறமை இருக்காது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் எல்லா கல்லுாரிகளும் நல்ல கல்லுாரிகள் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 434 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் வெறும் 34 கல்லுாரிகள் மட்டும் சிறந்த கல்லுாரிகளாக செயல்படுகிறது. 100 சதவீதம் பிளேஸ்மெண்ட் என விளம்பரம் செய்கிறது. ஆனால், அந்த கல்லுாரியில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அதனால் நல்ல கல்லுாரிகளை கண்டறிய வேண்டும். நல்ல கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் வாழ்க்கை வரைபடம் கீழ்நோக்கி செல்லும். ஒவ்வொரு மாணவருக்கும் சிந்திக்க கூடிய திறன் மிக முக்கியம். இந்த திறமை மூலம் தான் பெரிய நிறுவனங்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் போது எளிதாக வெற்றிப் பெற முடியும். உலக அளவில் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றால் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.கூகுல், லீட்கோட், கூகுல் ஸ்டெப் , லிங்க்டு புரோபில் போன்ற வேலை தேடும் ஆன்லைன் உள்ளது. இதற்கு மாணவர்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பயிற்சி எடுக்க வேண்டும். தற்போது தனிப்பட்ட திறமைக்கு தான் வேலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.