பிரளயகாலேஸ்வரர் கோவில் திருப்பணி பிப்.10ல் கும்பாபிேஷகம் நடத்த தீவிரம்
பெண்ணாடம் : பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம், வரும், பிப்., 10ம் தேதி நடக்க உள்ளதால் திருப்பணிகளை விரைந்து முடிக்க, சென்னை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பணியை துரிதப்படுத்தினர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 2006ல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது. 2018 ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்தது. கோவிலை புனரமைத்து மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில், அறநிலையத்துறை இணை ஆணையருக்கு விண்ணப்பித்தனர்.தொடர்ந்து, தொல்லியல் துறையினர் மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சன்னதி, சுற்று பிரகாரத்தில் தொல்லியல் துறை சார்ந்த கற்சிலைகள், கல்வெட்டுகள், கல் துாண்களை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பாலாலயம் நடத்தாததால் கோபுரத்தில் செடி, கொடிகள் மண்டி சிலைகள், சுவர்கள் சேதமடைந்து கோபுரங்கள் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டது.பக்தர்களின் கோரிக்கையேற்று, கடந்தாண்டு மே மாதம், திருப்பணி துவங்க கோவில் நிதி 39 லட்சத்து 53 ஆயிரம் மற்றும் உபயதாரர் நிதி 43 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 83 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.பாலாலய பூஜையை, தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன், தருமபுர ஆதீனம் திருபுவனம் கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் சேர்ந்து அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தனர்.கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய திருப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் ஜரூராக நடக்கிறது.இப்பணிகளை, இந்துசமய அறநிலையத்துறை (திருப்பணிகள்) இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை திட்டக்குடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் மகாதேவி, பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல், ஒப்பந்ததாரர் கார்த்திக், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.வரும், 2025 பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிேஷகம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.