நீர்வழி போக்குவரத்துக்கு வெட்டப்பட்ட பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சென்னையில் இருந்து விழுப்புரம் மரக்காணம், கடலுார் கடற்கரையையொட்டி பரவனாறு மற்றும் வெள்ளாறு வழியாக பரங்கிப்பேட்டை வரையில், பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டது. இதன் வழியாக, பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை வரை, படகு போக்குவரத்து இயக்கப்பட்டது. இங்கிருந்து அரிசி, பருத்தி, மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்களை படகில் எடுத்துச்சென்று சென்னையில் வணிகம் செய்தனர். புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால், படிப்படியாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கால்வாயும் பல இடங்களில் சேதமடைந்தது. துார்வாரவும் இல்லை, ஆக்கிரமிப்பில் சிக்கி, சுருங்கியது, முட்புதர்களாக பல இடங்களில் கால்வாய் மாறியுள்ளது.வெள்ளக்காலங்களில், பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பக்கிங்காம் கால்வாய் வடிகாலாக இருந்தது. மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் தேங்கியிருக்கும். இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததுடன், விவசாயத்திற்கும் அதிகளவில் பயன்பட்டு வந்தது. இதனால், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, கே.பஞ்சங்குப்பம், தோப்பிருப்பு, கரிக்குப்பம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.தற்போதைய நிலையில் பக்கிங்காம் கால்வாய் துார்ந்துள்ளதால், மழை, வெள்ள காலங்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் பல கிராமங்களில் தண்ணீர் தேங்குவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, வரலாற்று சிறப்பு மிக்க பக்கிங்காம் கால்வாயை, ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரினால் மழை வெள்ள காலங்களில் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.