விதவையிடம் ரூ.14,000 லஞ்சம் மாஜி தாசில்தாருக்கு சிறை
கடலுார்:கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் மாபூஷா. இவர், 2019ம் ஆண்டு என்.எல்.சி., நிறுவன உணவகத்தில் பணியாற்றிய போது, உடல் நிலை பாதித்து இறந்தார். அவரது மனைவி கமுர்நிஷா, 45, அரசின் வேலை வாய்ப்பு, மகனுக்கு கல்வி உதவித்தொகை பெற சான்றிதழ் கேட்டு, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.சான்றிதழ் வழங்க, 2019ம் ஆண்டு ஆக., 29ம் தேதி 14,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கண்ணன், 43, துணை தாசில்தார் அருள்பிரகாசம், 56, உடந்தையாக இருந்த உத்திரவன்னியன், 30, ஆகிய மூவரையும் கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார், அப்போது கைது செய்தனர்.கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது; விசாரணை நேற்று முடிந்தது. விசாரித்த நீதிபதி நாகராஜன், இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் தாசில்தார் கண்ணன், முன்னாள் துணை தாசில்தார் அருள்பிரகாசம் ஆகியோருக்கு தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், உத்திரவன்னியனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.