செயல் அலுவலர் பணியிடம் 5 பேரூராட்சிகளில் காலி
பரங்கிப்பேட்டை : மாவட்டத்தில், 5 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால், அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் 14 பேரூராட்சிகள் உள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், பொது சுகாதாரம், தெருமின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செயல் அலுவலர்கள் மூலம் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் தற்போது பரங்கிப்பேட்டை, கிள்ளை, சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, கெங்கைக்கொண்டான் உள்ளிட்ட பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், பொது சுகாதாரம், தெருமின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.மேலும், தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாவட்ட முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அந்தந்த பகுதிகளில் செயல் அலுவலர்கள் தங்கியிருக்க வேண்டும். ஆனால், 5 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் பணியிடம் காலியாக உள்ளதால் பொறுப்பு செயல் அலுவலர்களே கவனித்து வருகின்றனர். எனவே, செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ள பேரூராட்சிகளில் அலுவலர்கள் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.