உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் வட்டார விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவு செய்ய காலம் நீட்டிப்பு செய்துள்ளதால், விடுபட்டுள்ள விவசாயிகள் பதிவு செய்யுமாறு வேளாண் உதவி இயக்குனர் சிவப்பிரியன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கீரப்பாளையம் வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமை விவரங்களை வேளாண், தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்களால் கட்டணம் ஏதுமின்றி வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கீரப்பாளையம் வட்டாரத்தில் மொத்தம் 8,990 விவசாயிகள் உள்ள நிலையில் இதுவரை 5,627 விவசாயிகள் மட்டுமே தங்களது நில உடமைகளை பதிவு செய்துள்ளனர். மீதம் உள்ள 3,363 விவசாயிகள் தங்களது நில விவரங்களை பதிவு செய்யாமல் உள்ளனர். இவற்றில் பிரதமரின் கவுரவ நிதி பெற்று வரும் 635 விவசாயிகளும் அடங்குவர். இதுவரை பதிவு செய்யப்படாத விவசாயிகள் தங்களிடம் உள்ள அனைத்து நிலங்கள் தொடர்பான பட்டா, ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் கொண்டு தனிப்பட்ட அடையாள எண்களை பெறலாம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்து தனிப்பட்ட எண்களை பெற்றுள்ள விவசாயிகள் தங்களிடம் உள்ள பட்டா மற்றும் அனைத்து சர்வே எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொண்டு ஏதேனும் விடுபட்டிருக்கும் நிலையில், விடுபட்ட நிலங்களை கூடுதலாக பதிவு செய்ய வேண்டும். தற்போது பிரதமரின் ஊக்கத்தொகை பெற்று வரும் விவசாயிகள் நில உடமை விவரங்களை பதிவு செய்யாவிட்டால், அடுத்த தவணை பிரதமரின் ஊக்கத்தொகை பெறமுடியாது. எனவே விவசாயிகள் அனைவரும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள தேதிக்குள் தங்களது நில உடமைகளை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ