இழப்பீடு தொகை விடுவிப்பில் விவசாயிகள்... குழப்பம்; பாகுபாடு இல்லாமல் வழங்க கோரிக்கை
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 2024--2025ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை விடுவிப்பால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.மத்திய அரசு பயிர் காப்பீடு திட்டத்தில் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி நடப்பாண்டு மத்திய அரசு பங்களிப்புடன் பிரதான் மந்திரி பசல்பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.அதில், அறுவடை மகசூல் இழப்பீடு 60 சதவீதத்திற்கு 130 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டத்திலும் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு முதல் மாநில அரசு பங்களிப்புடன் மத்திய அரசும் பங்களிப்பு சேர்த்து பயிர் காப்பீடு நிறுவனம்செயல்படுத்த அறிவிப்பு செய்து ஏற்கனவே திட்டத்தை செயல்படுத்திய நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட வழிவகை ஏற்பட்டது.கடந்த மூன்று ஆண்டுகளாக பெயரளவில் திட்டத்தை செயல்படுத்திய பயிர் காப்பீடு நிறுவனங்கள்விவசாயிகளுக்கு இழப்பீடு சரி வர கிடைக்காத நிலை இருந்ததாக கூறப்படுகிறது.வழக்கமாக மத்திய அரசு வேளாண் விளைபொருட்களின் பயிரிடும் முறையை காரிப்பருவம் எனவும் ராபி பருவம் எனவும் செயல்படுத்தி வருகிறது.பயிர் காப்பீடு திட்டமும் இருபருவங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. குறுவை பருவம், சம்பா பருவம் என்ற அடிப்படையில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் வேளாண் துறை பயிர்களுக்கான இழப்பீடு தொகையை மகசூல் அறுவடை பரிசோதனை முடித்த காலத்தில் இருந்து 6 முதல் 7 மாத கால இடைவெளிக்குப் பிறகே இழப்பீடு தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.ஆனால் கடந்தாண்டு குறுவை மற்றும் சம்பா பருவம் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு அறுவடை முடிந்த 40 நாட்கள் இடைவெளியில் இழப்பீடு தொகை மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு இல்லாமல் தற்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.தற்போது, தேர்தல் நெருங் குவதால் கடலுார் மாவட்டம் சேந்திர கிள்ளை, பூவாலை, வயலாமூர், தச்சக்காடு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல விவசாயிகளுக்கு வரவு வைக்கவில்லை.இதுகுறித்து மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:ஒரே கிராம அளவில் அறுவடை மகசூல் அடிப்படையில் நெல் பயிரும், பிர்க்கா அளவில் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்றப் பயிர்களுக்கும் தற்போது வழங்கப்படும் இழப்பீடு தொகை குறித்து விவசாயிகளிடையே குழப்பம் நிலவுகிறது.எந்த கிராமம் திட்டத்தில் தேர்வாகி இருக்கிறது. எந்தெந்த விவசாயிகளுக்கு எவ்வளவு சதவீத அளவுகோல் அடிப்படையில் பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது என்ற விவரம் அனைத்திலுமே வெளிப்படை தன்மை இல்லை.கிராம வாரியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் இழப்பீடு தொகையில் நிறைய வேறுபாடுகளுடனும் ஒரே கிராமத்தில் சில விவசாயிகளுக்கு கூடுதலாகவும், சில விவசாயிகளுக்கு குறைவாகவும் இழப்பீடு வழங்கப்படுவதாகவும் சில கிராமங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்ற நிலையில் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.பயிர் காப்பீடு திட்டம் வெளிப்படைத் தன்மையுடன் மகசூல் குறைவின் அடிப்படையில் கிராமந்தோறும் பாகுபாடு இல்லாமல் இழப்பீடு வழங்குவதை கலெக்டர் உறுதி செய்து கண்காணிக்க வேண்டும்.