உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நில உடைமைகளை பதிவு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு; அரசின் திட்டங்களை தடையின்றி பெற யோசனை

நில உடைமைகளை பதிவு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு; அரசின் திட்டங்களை தடையின்றி பெற யோசனை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்ட விவசாயிகள் உடனடியாக நில உடைமைகள் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.கடலுார் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுகள் உருவாக்கும் பணி வேளாண்மை துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்திட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. வேளாண் மற்றும் சகோதரத் துறையில் உள்ள அனைத்து அலுவலர்கள், மகளிர் திட்டத்தின்கீழ் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள பயிற்றுனர்கள், பொது சேவை மையங்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. இந்த வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விபரங்களுடன் விவசாயிகள் விபரம் மற்றும் நில உடைமை வாரியாக புவிசார் குறியீடு செய்த பதிவு விவரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் 'தனிக்குறியீடு எண்' வழங்கப்படும். கடலுார் மாவட்டத்தில் உள்ள மொத்த விவசாயிகள் 2,17,381 நபர்களில் இதுவரை 1,19,803 விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 97,578 விவசாயிகள் அரசின் திட்டங்களை தடையின்றி பெற தங்களது விவரங்களை உடனடியாக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இனிவரும் காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்ட மானிய உதவிகள், பாரதப்பிரதமரின் விவசாய கவுரவ நிதி உதவித்தொகை, பயிர்க்கடன்,பயிர்காப்பீடு, பயிர் சேத நிவாரணங்கள் போன்ற அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் வேளாண் அடுக்கக தனிக்குறியீடு எண் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து துறை சார்ந்த பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம். விவசாயிகள் அரசுத் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு முறையும் அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அரசின் நன்மைகள் மற்றும் மானியங்கள் சரியான பயனாளிக்குசென்றடைவதை இத்திட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திட முடிகிறது. விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெற இயலும்.விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற மானியங்களின் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். எனவே கடலுார் மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் இதர ஆவணங்களை தங்களது கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் , சமுதாய வள பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பொது சேவை மையங்கள், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உடனடியாக பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை