உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெலிங்டனுக்கு காவிரி உபரி நீர் திட்டக்குடி விவசாயிகள் வலியுறுத்தல்

வெலிங்டனுக்கு காவிரி உபரி நீர் திட்டக்குடி விவசாயிகள் வலியுறுத்தல்

கடலுார் : வெள்ளாறு மற்றும் வெலிங்டன் நீர்தேக்கத்தின் நிரந்தர நீர்வரத்திற்கு காவிரி உபரி நீரை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் பழமை வாய்ந்த வெலிங்டன் நீர்தேக்கம் உள்ளது. நீர்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ., கரையின் நீளம் 4,300மீட்டர். ஏரியின் முழு கொள்ளளவு 2,580 மில்லியன் கன அடி. இதன் மூலம் நல்லுார், மங்களூர், விருத்தாசலம் ஒன்றியங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வெள்ளாற்றின் குறுக்கே தொழுதுார் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டின் வழியாக வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது. வெள்ளாற்றில் போதிய நீர்வரத்து இல்லாமல் பெரும்பாலான நாட்களில் வெலிங்டன் நீர்தேக்கம் முழு கொள்ளளவு நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மழைக்காலங்களில் ஆண்டுதோறும் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், உபரியாக உள்ள 4 லட்சம் கன அடி வீணாக கடலில் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீரை மடை மாற்றி திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி வழியே 65 கி.மீ. தொலைவிற்கு கால்வாய் அமைத்தால் தொழுதுார் அணைக்கட்டிற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்க முடியும் என, விவசாயிகள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். தொழுதுார் அணைக்கட்டில் இருந்து வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை திருப்பி தேக்கினால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன், 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும். மேலும் வெலிங்டன் ஏரியைச் சுற்றி வறண்டு கிடக்கும் சிறிய அளவிலான 26 ஏரிகளிலும் தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.வெள்ளாறு மற்றும் வெலிங்டன் நீர்ப்பாசன ஆதாரங்களை பெருக்க காவிரி உபரி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கடலுாரில் நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி