எம்.புதுாருக்கு பஸ் நிலையம் செல்வதால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது அ.திமு.க., முன்னாள் அமைச்சர் கவலை
கடலுார்: 'அ.தி.மு.க., ஆட்சியில் கடலுாரில் அடிக்கல் நாட்டிய பஸ் நிலையத்தை மாவட்ட அமைச்சர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு கொண்டு செல்வதால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை' என முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.கடலுார் வடக்கு மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் பகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. பகுதி செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மீனவரணி இணைச்செயலாளர் தங்கமணி, எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சுப்ரமணியன், ஜெ., பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம், அவைத்தலைவர் குமார், புலிசை சந்திரஹாசன் முன்னிலை வகித்தனர்.பூத் கமிட்டியை ஆய்வு செய்யும் பணிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் அப்துல் ரஹீம், சம்பத் ஆகியோர் பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் கடலுாரில் அடிக்கல் நாட்டிய பஸ் நிலையத்தை மாவட்ட அமைச்சர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு கொண்டு செல்கின்றார். மாவட்ட தலைநகரான கடலுாரில் பஸ் நிலையம் இல்லை.மாவட்ட அமைச்சருக்கும், கடலுார் தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கும் இடையே உள்ள பிரச்னையால் கடலுார் தொகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். புதிய பஸ் நிலையம் அங்கே சென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக விளங்குகிறது' என்றார்.