கடலுாரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியபோது வழிப்பறி கும்பல் தலைவன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
கடலுார்:கடலுாரில், கத்தியை காட்டி மிரட்டி, லாரி டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலின் தலைவனை, கடலுார் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கடந்த சில மாதங்களாக லாரி டிரைவர் மற்றும் பொதுமக்களை, கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிக்கும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்தது. கடலுார் எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் பேரில் வழிப்பறி குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பெரிய ஓதவந்தான்குடியை சேர்ந்த பிரபு,43, என்ற லாரி டிரைவர் தனது டிப்பர் லாரியில் திண்டிவனத்தில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்றார். நள்ளிரவில் துாக்கம் வந்ததால், கடலுார் அருகே ஆணையம்பேட்டை பாலத்தின் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தவிட்டு துாங்கினார்.அதிகாலை 3:00 மணியளவில் பைக்கில் வந்த 6பேர் கொண்ட கும்பல், லாரியில் துாங்கிக்கொண்டிருந்த பிரபுவை தாக்கிவிட்டு மொபைல் போன், 3ஆயிரம் ரொக்கத்தை பறித்து சென்றனர். வழியில் சீர்காழியை சேர்ந்த மணிமாறன்,34, என்ற லாரி டிரைவர் இயற்கை உபாதை கழித்துக்கொண்டிருந்தார். வழிப்பறி கும்பல் அவரிடம் மொபைல் போன் மற்றும் பணத்தைக்கேட்டு தாக்கினர். அவரிடம் ஏதும் இல்லாததால் தலை மற்றும் கைகளில் கத்தியால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியது.அடுத்து, கடலுார் எம்.புதுாரை் சேர்ந்த காளிமுத்து,45, என்ற விவசாயி, சாலையில் நடந்து சென்றபோது அந்தற கும்பல் அவரை மிரட்டி செல்போனை பறித்ததுடன், கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். ஒரே நாளில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததால் தனிப்படை போலீசார் உஷார் படுத்தப்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க விரைந்தனர்.போலீசாரை பார்த்த வழிப்பறி கொள்ளையர்கள் பைக்கில் ஆளுக்கொரு பக்கமாக தப்பியோடினர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற போலீசார், கடலுார் செம்மண்டலம் பகுதியில் தெருத்தெருவாக கொள்ளையர்களை தேடிப்பிடித்து கைது செய்தனர்.அதில் புதுச்சேரி உழவர்கரையை சேர்ந்த அறிவாசகம் மகன் ரேவந்த்குமார்,21, லாஸ்பேட்டையைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாஷ்,20, உழவர்கரையை சேர்ந்த அண்ணாதுரை மகன் அன்பரசு,20, திருபுவனை பாளையத்தை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் மகன் ரியாஸ் அகமது, 22, மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டதும், இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட புதுச்சேரி லாஸ்பேட்டை வீமன் நகரை சேர்ந்த கோபி மகன் விஜய் என்கிற மொட்டைவிஜய், 20, எம்.புதுாரில் உள்ள முந்திரிதோப்பு ஒன்றில் பதுங்கியிருப்பது தெரிந்தது.தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது, புதர் மறைவில் இருந்த விஜய், தனிப்படை போலீஸ் கோபி மற்றும் கணபதியை அடுத்தடுத்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, இன்ஸ்பெக்டர் சந்திரன், தனது துப்பாக்கியால் ரவுடி விஜய்யை மூன்று ரவுண்டுகள் சுட்டதில் நெஞ்சு மற்றும் இடுப்பு பகுதியில் தோட்டா பாய்ந்தது. காயமடைந்த விஜய்யை, போலீஸ் ஜீப்பிலேயே சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.என்கவுண்டரில் இறந்துபோன விஜய் மீது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கூட்டாக சேர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.ரவுடி வெட்டியதில் காயமடைந்த போலீசார் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை நேரில் பார்த்து விசாரித்த எஸ்.பி.,ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறுகையில், வழிப்பறி கும்பல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வந்தது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், வழிப்பறி திருடர்களை பிடிக்கச்சென்ற தனிப்படை போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றனர். தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சந்திரன், வழிப்பறி கும்பலின் தலைவன் விஜய்யை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியில் இறந்தார் என தெரிவித்தார்.
'டியோ குரூப்'
என்கவுன்டரில் கொல்லப்பட்ட விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் 'டியோ' ஸ்கூட்டரில் சுற்றி வந்ததால், இவர்களை 'டியோ குருப்' என புதுச்சேரி போலீசார் பெயர் வைத்துள்ளனர். இவர்கள் பெட்ரோல் குண்டு தயாரித்து வீசுவதில் கை தேர்ந்தவர்கள். திருட்டு, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் போலீசார் கைது செய்வதும், சிறார் என்பதால் எளிதாக ஜாமினில் வெளியே வந்து மீண்டும் மீண்டும் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
யார் இந்த விஜய்
என்கவுன்டரில் கொல்லப்பட்ட விஜய், புதுச்சேரி, திலாஸ்பேட்டை, வீமன் நகர், ஓடைத் தெருவை சேர்ந்த கோபி-சங்கரி தம்பதியின் மகன். இவரது பெயர் விஜய் (எ) மொட்டை விஜய்,19; ஏழாம் வகுப்பில் இடைநின்ற இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடு மற்றும் கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடுவது, நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோரை வழிமறித்து பணம், நகைகளை கொள்ளையடிப்பதும், பைக்குகளை திருடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.இதுதொடர்பாக இவர் மீது புதுச்சேரியில் கடந்த 2020 டிச., 21ம் தேதி முதல் கடந்தாண்டு அக்., 14 வரையில் மொத்தம் 21 வழக்குகள் உள்ளது. அவரது வீட்டில் இருந்து 100 அடி துாரத்தில் உள்ள கோரிமேடு போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 10 வழக்குகள் உள்ளது.இதுதவிர, விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பத்தில் தலா 2 , கிளியனுார் மற்றும் விழுப்புரம் தாலுகாவில் தலா ஒன்று என மொத்தம் 6 திருட்டு வழக்குகள் உள்ளன. கடலுார் மாவட்டத்தில் கடலுார் புதுநகர், கடலுார் முதுநகர் மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 30 வழக்குகள் உள்ளது.