உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குப்பை தரம்பிரிக்கும் இயந்திரம் பழுது: துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

 குப்பை தரம்பிரிக்கும் இயந்திரம் பழுது: துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

கடலுார்: கடலுார், வசந்தராயன்பாளையத்தில் குப்பை தரம்பிரிக்கும் இயந்திரம் பழுது ஏற்பட்டதால், பல மாதங்களாக தரம் பிரிக்கும் பணி மேற்கொள்ள முடியாமல், குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பைகளில் இருந்து வெளியேறும் கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தெருக்களில் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை சேகரிக்கிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் வசந்தராயன்பாளையம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரிக்கப்படுகிறது. தினமும் 2 முதல், 3 டன் வரை மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உரம் தயாரிப்பதிற்காக 50 தொட்டிகள் உள்ளன. குப்பைகளை தரம் பிரிக்க நவீன இயந்திரம் பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால், குப்பைகள் தரம் பிரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. குப்பை கிடங்கு ஊழியர்கள் குப்பைகளை ஒரு சிறிய அளவு தரம் பிரித்து வருகின்றனர். ஊழியர்களால் பல டன் அளவிற்கு குப்பைகளை தரம் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பைகளை மர்ம நபர்கள் சில நேரங்களில் தீ வைத்து விடுகின்றனர். அப்போது, மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கிடங்கிற்குள் தீயணைப்பு வாகனம் உள்ளே செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக தரம்பிரித்து அப்புறப்படுத்த மாநாராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ