கலெக்டர் முயற்சியால் கோல்ப் பயிற்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
விருத்தாசலம் : கலெக்டர் முயற்சியால் கோல்ப் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, சான்றிதழ் வழங்கப்பட்டது.'கோடையில் கற்றல் கொண்டாட்டம்' என்ற தலைப்பில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முயற்சியால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்படி, கலெக்டர், சி.இ.ஓ., டி.இ.ஓ., வட்டாரக் கல்வி மைய அலுவலர்கள் மற்றும் என்.எல்.சி., நிறுவனத்தின் கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரத்துறை அதிகாரி இணைந்த குழு மூலம் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்படி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் கோல்ப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நெய்வேலி என்.எல்.சி., விளையாட்டு மைதானத்தில், கடந்த மாதம் 15 முதல் 31ம் தேதி வரை சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் கோல்ஃப் பயிற்சி அளிக்கப்பட்டது.அதன்படி, பயிற்சி பெற்ற விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஹரிஹரன், ஷானவாஸ், விக்னேஷ், மனோகார்த்திக், சாந்ததேவன், பரணி, ரோகித் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் வினோத்குமார் சீருடை, சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகரன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராமச்சந்திரன் உடனிருந்தனர்.