கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
கடலுார்; கடலுாரில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.கடலுார் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 3 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு 100சதவீதம் கோமாரி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. முகாம் துவக்க விழா நேற்று கடலுார் அருகே நாணமேடு கிராமத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி போடும் பணிக்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கால் மற்றும் வாய் நோயானது, கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போர்க்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.இந்நோய் பாதிப்பால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுகிறது.நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே, கோமாரி நோய் கால்நடைகளுக்கு ஏற்படாமல் தடுப்பதற்கு ஜன., 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை 6வது சுற்று தடுப்பூசி போடப்படுகிறது. மூன்று லட்சம் கால்நடைகளுக்கு போடப்பட உள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறலாம் என, தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கால்நடைத்துறை கடலுார் மண்டல இணை இயக்குனர் பொன்னம்பலம், துணை இயக்குனர் தங்கவேல், உதவி இயக்குனர் வேங்கடலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.