உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அரசு பள்ளிகள் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிப்பு
நடுவீரப்பட்டு : அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி அளித்தல்,மாணவர்களின் உடற்திறனை மேம்படுத்துதல் போன்ற பணிகளை செய்வது வழக்கம். மேலும் பள்ளி அளவில் மாணவர்களை விளையாட்டில் தயார்படுத்தி மாவட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். பள்ளியின் ஒழுக்கம்,பள்ளியில் நடக்கும் விழாக்களில் மாணவர்களை கலந்து கொள்ள வைப்பது போன்ற பணிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.கடலுார் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு மற்றம் சி.என்.பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது.இந்த ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 900 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே உடற்கல்வி ஆசிரியர் பணியில் இல்லை.இதனால் இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமின்றி படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் கிராம பகுதிகளை சேர்ந்த மாணவர்களே அதிகளவு படித்து வருகின்றனர்.இவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தும்,சரியான வழிகாட்டுதலுக்கான உடற்கல்வி ஆசிரியர் பணியில் இல்லாததால் இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு திறன் வீணாகி வருகிறது. ஆகையால் மாவட்ட கல்வி அதிகாரிகள் இப்பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.