விருத்தாசலம் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு, அரசு சார்பில் அஞ்சலி
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு, அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் நடராஜன்,43.இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். தற்போது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார்.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் இவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.அங்கு நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார். இதனால், அவரது மனைவி கீதா, தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்துள்ளார்.அதன்பின் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, நேற்று அவரது சடலம் வீட்டிற்கு கொண்டவரப்பட்டது.உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு, அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுத்ததன் பேரில், தகவலறிந்து வந்த விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயகுமார், திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் ஆகியோர் நடராஜன் சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.