உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்: 2,700 குடும்பங்கள் பாதிப்பு

நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்: 2,700 குடும்பங்கள் பாதிப்பு

பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில், குறைந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்திட மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, சித்தரசூர் துணை மின்நிலையத்தில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய உயர்மின் அழுத்த பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இப்பகுதியில் உள்ள 2,700 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.இந்த மின்பாதையில் 180 புதிய மின்கம்பங்கள், 19 டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதில் மின்கம்பங்கள் நடப்பட்டு, ஒரு டிரான்ஸ்பார்மருக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சி.என்.பாளையம் சாலையொட்டி, புளியமரத்தின் கிளைகள் தடுப்பதால் மின்கம்பிகள் இழுக்க இயலவில்லை.இந்த புளியமரம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்பதால், சிக்கல் ஏற்பட்டது. கடலுார் தாசில்தார் இப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, கடந்த மாதம் தாசில்தார் அலுவலகத்தில் மின்துறை அதிகாரிகள், பொதுமக்கள், கோவில் நிர்வாகி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில், மரக்கிளைகளை அகற்ற விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை