உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சளி, இருமலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி; டாக்டர் முகுந்தன் ஆலோசனை

சளி, இருமலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி; டாக்டர் முகுந்தன் ஆலோசனை

கு ழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும் போது அவர்களை அதிலிருந்து எப்படி காப்பது என்பது குறித்து குழந்தைகள் நல சிறப்பு டாக்டர் முகுந்தன் ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பிறந்த குழந்தைகள் 6 மாதங்கள் வரை மூக்கடைப்பும், மூச்சு விடும்போது தொண்டையிலிருந்து சத்தம் வருவது அடிக்கடி ஏற்படும். அதற்காக மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மூச்சுவிட சிரமம் அல்லது பால் குடிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல் இருந்தால் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டியது அவசியம். 6 மாதம் முதல் 3 வயது வரை குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவது இயற்கை. குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லையென்றால் மருந்து இல்லாமலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மூச்சு விடுதலில் சிரமம், அதிக இருமல் இருப்பின் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் இருப்பின் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மார் சளி அதிகமாக இருந்தாலும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து கொடுக்க வேண்டும். டாக்டரின் ஆலோசனையில்லாமல் மருந்து கடைகளில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதல்ல. சில சமயங்களில் கேடு விளைவிக்கக்கூடும். பெட்னிசால் போன்ற சொட்டு மருந்துகளை மருத்துவர் அனுமதியில்லாமல் கண்டிப்பாக போடக்கூடாது. 6 வயது வரை குழந்தைகளுக்கு சளி பிடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது. அதிக மருந்துகள் கொடுப்பதன் மூலம் தானாகவே ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு டாக்டர் முகுந்தன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !