கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு: மாநில பட்டியலில் பின்தங்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சி
கடலுார்: 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தபோதிலும், மாநில பட்டியலில்பின்தங்கியது கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் உள்ள 438 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 44 மாணவர்கள், 15 ஆயிரத்து 417 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 461 பேர் எழுதினர். அவர்களில், 15 ஆயிரத்து 882 மாணவர்கள், 14 ஆயிரத்து 796 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 93.18; மாணவிகள் 95.97. மாவட்டத்தின் சராசரி தேர்ச்சி சதவீதம் 94.51.வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி சதவீதமே அதிகமாகும். தேர்வில் 102 அரசு பள்ளிகள், 12 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 90 தனியார் பள்ளிகள் என மொத்தம் 204 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.கடந்தாண்டு 92.63 சதவீதம் பெற்று மாநிலத்தில் 19வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு 1.88 சதவீதம் கூடுதலாக பெற்ற போதிலும், 20ம் இடத்திற்கு பின்தங்கியது. பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 10வது இடத்தை பிடித்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வில் கடந்தாண்டைவிட ஒரு இடம் பின்தங்கியது கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.