மேலும் செய்திகள்
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த யோசனை
07-Apr-2025
விருத்தாசலம்: மாவட்டதில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையுடைந்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக தென்னை சாகுபடி தோட்டங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனை தவிர்க்க விவசாயிகள், தங்கள் தென்னை தோட்டங்களை முறையாக கண்காணித்து பராமரிக்க வேண்டும்.இதுகுறித்து விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன் மற்றும் பூச்சியியல் துறை இணை பேராசிரியர் இந்திராகாந்தி ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் வட்ட அல்லது சுருள் வடிவிலான மஞ்சள் நிற முட்டைகளை இலையின் அடிப்பரப்பில் தனித்தனியாக இட்டு, மெழுகு பொருளால் ஒன்றிணைக்கப்பட்டு அரை வட்டமாக காட்சியளிக்கும்.இதனை பார்ப்பதற்கு மாவு பூச்சி போன்றே தோற்றம் அளிப்பதால் விவசாயிகள் இதனை மாவு பூச்சி என்று தவறாக நினைத்து விடுகின்றனர். அறிகுறிகள்
இந்த பூச்சிகள் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். 30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.மேலும், இந்த ஈக்களில் இருந்து வெளியேற்றப்படும் பசை போன்ற திரவம் இலைகளின் மேல் படர்ந்து கேப்னோடியம் என்ற கரும் பூசனம் வளர ஏதுவாகின்றது. இவ்வாறு மேற்புறம் கருப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயலிலிருந்து மகசூல் குறையும்.ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் 200க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. வாழை, கொய்யா, சீத்தாப்பழம், மா, பலா போன்றவைகளும் இந்த பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஆனால், இந்த ஈக்கள் தென்னையை மிக அதிக அளவில் தாக்கும் தன்மை வாய்ந்தது. மேலாண்மை முறைகள்
பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க தென்னை ஓலையின் அடியில் தண்ணீரை நன்கு பீய்ச்சி அடிக்க வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையது. எனவே, 5 அடி நீளம் மற்றும் 1.5 அடி அகலமுடைய பாலிதீன் தாள்களில் இருபுறமும் விளக்கெண்ணை தடவி ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் தென்னை தோட்டங்களில் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.அதேபோல், அபேடோகிரைசா எனப்படும் இரை விழுங்கி பூச்சியின் முட்டைகளை ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில் தென்னங்கீற்றுகளில் இணைத்து கட்டி அழிக்கலாம். ஊடுபயிர்
தென்னை மரங்களுக்கு இடையே வாழை, கல்வாழை மற்றும் சீத்தாமர செடிகளை ஏக்கருக்கு 20 முதல் 25 என்ற எண்ணிக்கையில் ஊடுபயிர் செய்யலாம். இலைகளின் மேல் படரும் கரும்பூசனத்தை நிவர்த்தி செய்ய மைதா மாவை பசை போல் காய்ச்சி பின்பு அதிலிருந்து ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவு கரைசலை தென்னை ஓலைகளின் கரும் பூசனம் வளர்ந்துள்ள பகுதிகளில் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். இயற்கையான எதிரிகள்
வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும் போது கிரைசோ பர்லா இரை விழுங்கிகள், காக்சினேல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகள் ஆகிய நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையாகவே தென்னந் தோப்புகளில் உருவாக ஆரம்பிக்கும்.ஆனால், அதிக அளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும் போது நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்துவிடும். எனவே, பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கையான எதிரிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது முக்கியமாகும்.எனவே, தென்னை விவசாயிகள் அனைவரும் புதிய வகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் நடமாட்டத்தை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
07-Apr-2025