கடலுார் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை அதிகரிப்பு! போலீசார் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கந்து வட்டிக்கொடுமையால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பல குடும்பங்கள் சிக்கி சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. கடலுார் மிகவும் பின் தங்கிய மாவட்டம். இங்கு தனியார் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகள், சுய உதவிக்குழுக்கள் என ஏராளமானோர் வட்டிக்கு பணம் தருகின்றனர் . மற்றவர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றால், அரசிடம் 'சால்வன்சி' கொடுத்து அனுமதி பெற்ற பின்பே வட்டிக்கடை, பைனான்ஸ் தொழிலை செய்ய முடியும். ஆனால், தற்போது யார் வேண்டுமானாலும் வட்டித்தொழிலில் ஈடுபடலாம் என்கிற நிலை உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் தான் அதிகளவு வட்டித்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது, புதியதாக தொழில் துவங்கியவர்கள் கந்துவட்டி, மீட்டர் வட்டி என, படாத பாடுபடுத்துகின்றனர். விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர், டிரைவர்கள், போலீசார், என எல்லோருமே இந்த தொழிலில் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். மொபைல் போனில் இருந்து பணத்தை தினசரி வட்டிக்கு கொடுக்கின்றனர். ஓரிரு நாட்களில் பணத்தை திரும்ப மொபைல் போன் மூலமாகவே அனுப்பிட வேண்டும். இதில் வட்டி மட்டும், 30 பைசாவுக்கு குறைவில்லாமல் வட்டி வாங்குகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் வட்டிக்கு வாங்குபவர்கள் தமது சொத்துக்களை முழுவதுமாக, கந்துவட்டிக்காரர்களிடம் கிரையம் செய்து கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு கிரையம் செய்து கொடுத்தவுடன் சொத்து கொடுத்தவர்கள் செலவிலேயே பட்டாவும் மாற்றி தர வேண்டும். அதன் பின்னர் தான் பணம் கொடுப்பார்கள். இதன் பின்னர் பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்திய பின்னர்தான் மீண்டும் கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து ஏற்கனவே கிரையம் செய்த சொத்தை திரும்ப கிரையம் பெற வேண்டும். இதில் முக்கால் பாகம் சொத்தை இழந்தவர்கள் தான் மிச்சம். இது மட்டும் அல்லாமல் பல மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகள் கடன்களை தாரளமாக வீடு தேடி வந்து கொடுக்கின்றனர். ஆனால் அதன் பின்னர் இ.எம்.ஐ., செலுத்தவில்லையென்றால் உள்ளூர் குண்டர்களை ஏவி விட்டு வீட்டிற்கு வந்து கலாட்டா செய்வது, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துகொண்டு வெளியேறாமல் இருப்பது, கடன் வாங்கியவரிடம் வாய்க்கு வந்தபடி பேசி வம்புக்கு இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் நடுவீரப்பட்டு அருகே விபத்து காரணமாக தவணை செலுத்தாதவரை, 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமும் அவ்வப்ேபாது அரங்கேறி வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு கடன் பெற்ற 3 ஆண்டுகளுக்குள் கடுமையாக கடன் வசூல் செய்யக்கூடாது என சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. கடன் பிரச்னை குறித்து வரும் புகார்கள் மீது எஸ்.பி., பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால்தான் வறுமைக்கோட்டில் வாழும் மக்களை கடன் பிரச்னையில் இருந்து மீட்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.