ஆளும் கட்சியின் அசைன்மென்ட்; தகவல் சேகரிப்பில் உளவுப்பிரிவு தீவிரம்
தமிழகத்தில் ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 2026ல் முடிவடைகிறது. வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி சார்பில் காவல் துறையின் முக்கிய பிரிவாக உள்ள உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தற்போதைய தி.மு.க., அரசு எப்படி உள்ளது. இந்த ஆட்சியில் அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளீர்களா. உங்கள் பகுதியில் தீர்க்கப்படாத 3 பிரச்னைகள், அதில், சாலை, குடிநீர், அரசு அலுவலகங்களில் லஞ்சம், தற்போது தேர்தல் நடந்தால் யாருக்கு ஓட்டளிப்பீர்கள் என்பது உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகாரிகளும் பதில்களை உடனுக்குடன் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.சில வாரங்களுக்கு முன் மாநிலம் முழுதும் உள்ள உளவுப்பிரிவுக்கு திடீர் உத்தரவு அனுப்பப்பட்டது. அதில், தி.மு.க., அரசு வெற்றி பெறும் ஓட்டுச்சாவடி மையங்கள். அதில், த.வெ.க.,வின் ஓட்டு எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் உளவுப்பிரிவு அறிக்கை தயார் செய்து அனுப்பியுள்ளது.சில நாட்களுக்கு முன், ஆளும் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர். எதிர்கட்சி, இதர கட்சிகள் சார்பில் யார் யார் போட்டியிட விரும்புகிறார்கள். மக்கள் செல்வாக்கு உள்ளவர்களா என அவர்களின் பட்டியல்களை உடனடியாக விசாரித்து அறிக்கை அனுப்ப ஆளும் தலைமை அறிவுறுத்தியுள்ளது.இதற்காக, கடலுார் மாவட்டத்தில் உள்ள உளவுப்பிரிவு போலீசார் ரகசியமாக ஆளும் கட்சியினரையும், எதிர்கட்சி மற்றும் இதர கட்சிகள் தரப்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அவர்களின் செல்வாக்கு குறித்து தகவல் சேகரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.