சர்வதேச காடுகள் தினம் என்.எல்.சி.,யில் அனுசரிப்பு
நெய்வேலி : வன பாதுகாப்பு மற்றும் நிலையான நீர் மேலாண்மை பணிகளில், என்.எல்.சி., நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக, அந்நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி பேசினார்.என்.எல்.சி., சார்பில், சர்வதேச காடுகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் என்.எல்.சி., புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டங்களின் செயல் இயக்குநர் அன்புச்செல்வன் வரவேற்றார். சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கி, மரகன்றுகளை நட்டு வைத்து பேசுகையில், என்.எல்.சி., யில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில், 2,775 ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. சுரங்க நீர் பயன்பாடு மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் ஆகியவற்றின் மூலம், நிலையான நீர் மேலாண்மையில், என்.எல்.சி., தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நெய்வேலியைச் சுற்றியுள்ள 40 கிராமங்களில் உள்ள 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்காக 430 லட்சம் கன மீட்டர்தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கூடுதலாக, நெய்வேலி நகரத்தில் வசிக்கும் ஒரு லட்சம் மக்களுக்கு, சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு, குடிநீராக வழங்கப்படுவதோடு, சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்திற்காகவும் வழங்கப்படுகிறது.மேலும், தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் விநியோக வாரியத்திற்கு 6 பேரூராட்சிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 625 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம், 7 லட்சத்து 68 ஆயிரம் மக்கள் பயனடைகிறார்கள். என்.எல்.சி.,நீர்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் நிலையான முயற்சிகளில், தனது அர்ப்பணிப்பு முயற்சிகள்தொடரும் என்றார்.