| ADDED : அக் 07, 2024 06:47 AM
கடலுார்: அஞ்சல் துறையில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கு, கடிதங்கள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பு; அஞ்சல் துறையில் தேசிய அளவில் தி ஜாய் ஆப் ரைட்டிங், இம்பார்டண்ட் ஆப் லெட்டர் இன் டிஜிட்டல் ஏஜ் என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி கடந்த மாதம் 14ம் தேதி முதல் வரும் டிச., 14ம் தேதி வரை நடக்கிறது. கடிதம் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும். கடிதம் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்நாட்டு கடிதத்திலோ அல்லது 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் ஏ4 அளவுள்ள வெள்ளை காகிதத்திலோ எழுதி அஞ்சலக உறையில் வைத்து அனுப்ப வேண்டும்.மேலும், கடிதத்தில் நான் 18 வயதுக்கு மேற்பட்டவர் அல்லது நான் 18 வயதுக்குட்பட்டவர் என்று சான்றளிக்க வேண்டும். அனைத்து வயதினரும் இப்போட்டியில் பங்கு பெறலாம் என்றாலும், 18 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.போட்டிக் கடிதத்தை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார்- 607 001 என்ற முகவரிக்கு வரும் டிச., 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன் பிறகு பெறப்படும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. மாநில அளவில், சிறந்த மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு முதல் பரிசாக 25,000 ரூபாய், இரண்டாவது பரிசாக 10,000 ரூபாய், மூன்றாவது பரிசாக ரூ. 5000 வழங்கப்பட்டு அந்தக் கடிதங்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும். தேசிய அளவில் சிறந்த மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு முதல் பரிசாக 50,000 ரூபாய், இரண்டாவது பரிசாக 25,000 ரூபாய், மூன்றாவது பரிசாக ரூ.10,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இப்போட்டியில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.