உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய பஸ் நிலையத்திற்கு புது ஆட்சியில் விடியல்... கிடைக்குமா?இட நெருக்கடியால் பயணிகள், ஊழியர்கள் தவிப்பு

புதிய பஸ் நிலையத்திற்கு புது ஆட்சியில் விடியல்... கிடைக்குமா?இட நெருக்கடியால் பயணிகள், ஊழியர்கள் தவிப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இட நெருக்கடியால் பயணிகள், போக்குவரத்து ஊழியர்கள் அவதியடைந்து வருவதால், புதிதாக பஸ் நிலையம் அமைக்க விஜய் ஆட்சியில் விடிவு காலம் கிடைக்குமா என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில், அதிக கிராமங்களை உள்ளடக்கியது விருத்தாசலம். உட்கோட்டத் தலைமையிடமான இங்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், கோட்ட நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி, வணிகவரி, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட பல்வேறு வங்கிகள், பெருவணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. சுற்றியுள்ள 125க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்கு விருத்தாலம் வந்து செல்கின்றனர். இங்கு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய தி.மு.க., அமைப்பு செயலாளர் செல்வராஜ், பிரதான ஜங்ஷன் சாலையில் பஸ் நிலையம் அமைக்க இருந்த தனக்கு சொந்தமான இடத்தை அரசுக்கு வழங்கினார். அங்கு, அப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர், கழிவறை, இருக்கை வசதிகளுடன் பஸ் நிலையம் கட்டிதரப்பட்டது. தற்போது, விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 1, 2ல் இருந்து 145க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் உட்பட தினசரி 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளம் போன்ற பிற மாநிலங்கள் மட்டுமல்லாது சென்னை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம், கடலுார், விழுப்புரம் போன்ற மாநகரங்களுக்கும் பஸ் வசதி உள்ளது. தவிர கட்டணமில்லா மகளிர் பஸ் என்று குக்கிராமங்களுக்கும் பஸ்கள் இயங்குகின்றன. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட தினசரி ஆயிரக்கணக்கானோர் பஸ் வசதி பெற்று பயனடைந்து வருகின்றனர். ஆனால், மக்கள் தொகை பெருக்கமடைந்த நிலையில், இட நெருக்கடியில் பஸ் நிலையம் இயங்கி வருவதால் பயணிகள், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இருக்கை, குடிநீர், கழிவறை மற்றும் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் தன்னிறைவாக இல்லை. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், கடந்த தி.மு.க., ஆட்சியில் புறநகர் பஸ் நிலையம் அமைத்திட இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. அதுபோல், அப்போதைய எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், புதிய பஸ் நிலையம் தேவை என சட்டசபையில் பேசியதற்கு, '5 ஏக்கர் நிலம் இருந்தால் காட்டுங்கள்; உடனடியாக பஸ் நிலையம் கட்டித்தரப்படும் என முன்னாள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பதிலளித்திருந்தார். ஆனால், புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு இடம் பார்வையிடப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, த.வெ.க., ஆட்சியமைத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், விருத்தாசலத்தில் நீண்டகால கோரிக்கையான புதிய பஸ் நிலையம் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடம் அதிகரித்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் விரும்பி தேர்வு செய்த த.வெ.க., ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி, விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில், பஸ் நிலையம் அமைந்த இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள செராமிக் தொழிற்பேட்டை வளாகத்தில் 10 ஏக்கருக்கு அதிகமாக நிலம் உள்ளது. இங்கு புதிய பஸ் நிலையம் அமைந்தால், 100 மீட்டர் தொலைவில் ரயில் நிலையத்திற்கும், 500 மீட்டர் தொலைவில் பழைய பஸ் நிலையத்திற்கும் பயணிகள் எளிதில் சென்றுவர முடியும். அதுபோல், விரிவுபடுத்தப்பட்ட விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை நான்குவழிச்சாலையில், சென்னை, விழுப்புரம் மார்க்க பஸ்களும்; கடலுார், சிதம்பரம், புவனகிரி மார்க்கத்தில் செல்லும் பஸ்கள், குப்பநத்தம் புதிய புறவழிச்சாலையிலும், வேப்பூர், ஆத்துார், சேலம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், ரயில்வே ஜங்ஷன் இணைப்பு சாலையிலும் எளிதில் செல்லலாம். இதனால், நகருக்குள் பஸ்கள் சென்று வருவதால் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்கப்படும். எனவே, விருத்தாசலத்தில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை த.வெ.க., அரசு செயல்படுத்தி, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று என நிரூபிக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான கடலுார் ராஜ்குமார் நடவடிக்கை எடுப்பாரா என பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை