பள்ளிகள் பராமரிப்பு நிதி செலவிடப்படுகிறதா
தமிழகத்தில், அரசு பள்ளிகள் பராமரிப்பு செலவுகளுக்காக, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மானிய நிதி விடுவிக்கப்படுகிறது. அதன்படி, 1 முதல் 30 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, ரூ. 10 ஆயிரம், 31 -- 100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம், 101 -- 250 மாணவர்கள்உள்ள பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய், 251 - 1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய்; ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, ரூ. 1 லட்சம் மானியத்தொகை வழங்கப்படும்.இந்த நிதி, பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, பள்ளிக்கு வழங்கப்பட்டு செலவிடப்படுகிறது. இந்த மானிய தொகையில், 10 சதவீதம் பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்துாய்மை படுத்துதல், துாய்மையான குடிநீர், கழிப்பறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள 37,471 பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்பு செலவினங்களுக்காக ரூ.123.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 50சதவீத தொகை ரூ.61.53 கோடி கடந்த ஜூலை மாதம், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில், பள்ளி தொடர் செலவினம் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக வழங்கப்படும் மானியம் முறையாக செலவிடப்படுவதில்லை என பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றஆரோக்கியமான சூழ்நிலை, அடிப்படை வசதிகளை பள்ளி நிர்வாகம் செய்துதர வேண்டும். ஆனால் கடலுார் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் பயன்படுத்தும் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. பள்ளி வளாகம் மற்றும் மைதானத்தை கூட சுத்தம் செய்யாமல் பல பள்ளிகளில் புதர் மண்டிப்போய் கிடக்கிறது. ஆனால், அடிப்படை தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட மானிய நிதி, வேறு சிில பணிகளை செய்ததாக கணக்கு காண்பித்து, அரசு பணம் வீணடிக்கப்படுகிறது என குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், மாவட்டத்தில் பள்ளிகளை முறையாக பராமரிக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு வழங்கும் நிதி கூட போதுமானதாக இல்லை. பல தலைமை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கியஸ்தர்களிடம் பள்ளிக்கு தேவையானவற்றை கேட்டுப்பெற்று சிறந்த பள்ளியாக கட்டமைக்கின்றனர். சில ஆசிரியர்கள் சொந்த பணத்தை பள்ளிக்காக செலவு செய்தும், கட்டமைப்புகளை உருவாக்குகின்றனர். ஆனால், பல பள்ளிகளில் இதுபோன்ற நிலை இல்லை. மாணவர்களின் சுகாதாரத்தில் ஆசிரியர்கள் அக்கறையோடு செயல்பட வேண்டும்.அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.