கல்லுாரி மாணவர்களுக்கு கடன் சிதம்பரத்தில் நாளை முகாம்
கடலுார், : சிதம்பரத்தில் கல்லுாரி மாணவர்களுக்கான நான் முதல்வன் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை நடக்கிறது. தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான 'நான் முதல்வன்- உயர்வுக்குப் படி' என்ற தலைப்பில் வழிகாட்டி நிகழ்ச்சி சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்தில் நாளை 26ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சி காலை 9:00 மணிக்கு துவங்கி 12.30 மணி வரை நடக்கிறது. கல்வி ஆலோசகர்கள், பல்வேறு துறை தொழில் நிபுணர்கள் பங்கேற்று, உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஊக்கமளித்தல், மாணவர்கள் வாழ்க்கை பாதையை எவ்வாறு தேர்வு செய்வது, வங்கிக் கடன் மற்றும் அரசு உதவித் தொகை பெறுவது, அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளுதல், உயர் கல்விக்கு வழிக்காட்டுதல் போன்ற தலைப்புகளில் கருத்துரை ஆற்றுகின்றனர். நிகழ்ச்சியையொட்டி மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு, ஒவ்வொரு கல்லுாரிக்கும் அதன் கல்லுாரி முதல்வர் கல்விக் கடன் தொடர்பான கண்காணிப்பு அலுவலராக செயல்படுவார். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் http://www.vidyalakshmi.co.in/students என்ற இணைய தளம் மூலம், கல்வி சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஏதுவாக முகாமில் இணையவழியில் உடனடி சான்றுகள் வழங்க, மேலாளர் தலைமையில் மாவட்ட இ-சேவை உதவி மையம், வங்கி அதிகாரிகளின் முன்னோடி வங்கி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் முகாமில் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.