வௌிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ.38 லட்சம் மோசடி செய்தவர் கைது
கடலுார்: காட்டுமன்னார்கோவில் அருகே, வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கந்தகுமாரன் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பிரத்திவிராஜ், 29; இவர், தான் ஹங்கேரி நாட்டில் வேலை செய்து வருவதாகவும், வௌிநாட்டு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதை நம்பிய, குமராட்சி அருகே உள்ள சிவக்கம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவர், மனது மகனுக்கு வேலை கேட்டு, பிரத்திவிராஜை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, சிங்கப்பூரில் மாதம் 1லட்சத்து 40ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை உள்ளது எனவும், அதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தார். அதை நம்பி, பல தவணைகளாக 5 லட்சம் ரூபாயை கலியபெருமாள் அனுப்பி வைத்தார்.ஆனால், பிரித்திவிராஜ் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். இதேபோல், லால்பேட்டை விஜய், டி.நெடுஞ்சேரி முகமதுஅலி, கண்டமங்கலம் சம்பந்தம், ஆத்துக்குறிச்சி சூரியபிரகாஷ், வீராநந்தபுரம் உமாராணி ஆகியோரிடம் தலா 5 லட்சம் ரூபாய், புதுாரை சேர்ந்த ராஜாமணிமாறனிடம் 8 லட்சம் ரூபாய் என, மொத்தம் 38 லட்சம் ஏமாற்றியது தெரிந்தது.புகாரின் பேரில் கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று கோவிந்தன் மகன் பிரித்திவிராஜை, 29; கைது செய்தனர்.