உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புறவழிச்சாலையில் மெட்டல் பீம் கிராஷ் பேரியர் தடுப்பு சேதம்: விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் கவனிப்பார்களா?

புறவழிச்சாலையில் மெட்டல் பீம் கிராஷ் பேரியர் தடுப்பு சேதம்: விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் கவனிப்பார்களா?

விருத்தாசலம்: விருத்தாசலம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே சாலையோர விளிம்பில் பாதுகாப்பிற்காக இருபுறமும் உள்ள 'மெட்டல் பீம் கிராஷ் பேரியர்' போல்ட்டுகள் கழன்று விழுந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை - ஜெயங்கொண்டம், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக என்.எல்.சி., இந்தியா லிமிடெட், இறையூர், வேப்பூர் சர்க்கரை ஆலைகள் மற்றும் பெண்ணாடம் அடுத்த அரியலுார் மாவட்ட எல்லையில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன.இதனால், விருத்தாசலம் நகரில் வாகன நெரிசல் காரணமாக பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை சேலம் மார்க்கமாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் குப்பநத்தம் கிராம சாலையில் இருந்து அரசு பழத்தோட்டம், செராமிக் தொழிற்பேட்டை வழியாக புதிய புறவழிச்சாலை போடப்பட்டது. விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில், மேட்டுக்காலனி அருகே ரயில்வே மேம்பாலம் செல்கிறது. 50 அடி உயரத்தில் மேம்பாலம் இருப்பதால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் இருந்தது. அதனைத் தவிர்க்கும் வகையில் மேம்பாலத்தின் இருபுறமும் 1,200 மீட்டர் தொலைவிற்கு வாகன ஓட்டிகளை விபத்திலிருந்து பாதுகாப்பதற்காக சாலையோர விளம்பில் 'மெட்டல் பீம் கிராஷ் பேரியர்' எனும் இரும்புகளால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டது.ஆனால், இந்த தடுப்புகளில் போடப்பட்டிருந்த போல்ட்டுகள் அகற்றப்பட்டதால், தடுப்புகள் கழன்று உள்ளது. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'மெட்டல் பீம் கிராஷ் பேரியர்' பொருத்துவதற்கு முன் அவ்வழியே எதிரெதிர் திசையில் சென்ற 2 கார்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில், மேம்பாலத்தில் இருந்து கார்கள் 40 அடி பள்ளத்தில் உருண்டன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. எனவே, சேலம் புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படும் முன் சாலையோர தடுப்புகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி