வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல் அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில்வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து, நகராட்சி அலுவகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குட்பட்ட 36 குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த 255.64 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் 60சதவீதம் முடிந்துள்ளது. சிதம்பரத்தில் 36 சாலை பணிகளில் 27 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலைகளில் மீண்டும் சாலை போடும் பணிகள் நடக்கிறது. சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து திட்டப் பணிகளையும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார். நகராட்சி கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கொள்ளிடம் வடிநிலக் கூட்டம்) காந்தரூபன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமாரராஜா, திட்ட அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) வரதராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக செயற்பொறியாளர் ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.