வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விடியல் ஆளுங்க கிட்டே சொன்னா துப்புரவா க்ளீன் பண்ணிக் குடுத்திருப்பாங்களே...
கடலுார்: கடலுார் தென் பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'பெஞ்சல்' புயலால் 2 நாட்கள் புதுச்சேரி, கடலுாரில் கனமழை பெய்தது. புயல் கடந்து சென்ற பாதை பகுதி முழுதும் அதி கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாத்தனுாரில் இருந்து துவக்கத்தில் 6,000 கனஅடி திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக உயர்ந்தது. முதல் நாள் 2 லட்சத்து 12,000 கன அடி நீர், சுபா உப்பலவாடி முகத்துவாரம், வழியாக சென்று வங்கக்கடலில் கலந்தது. வெள்ள நீர் முழுமையாக வங்கக்கடலுக்கு செல்லாமல் வடக்கு கரையோர கிராமங்களான நாணமேடு, உச்சிமேடு கிராமங்களும், தெற்கு கரையோர கிராமங்களான கண்டக்காடு, தாழங்குடா கிராமங்களிலும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மணல் மேடு
பல எக்டர் நிலங்களில் மண் மேடிட்டும், பல எக்டர் நிலங்கள் யானை பிடிக்கும் பள்ளங்களாக மாறின. ஏனென்றால் பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு, கருவேல முள் ஆகியவை பல ஏக்கர் கணக்கில் வளர்ந்துள்ளன. கிராமங்கள் பாதிப்பு
இந்த மணல் திட்டுக்களால் தான் வெள்ளநீர் ஆற்றின் மையத்தில் ஓடாமல் இரு பிரிவாக பிரிந்து சென்றதில் மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடைந்து வெளியேறியது. பெண்ணையாற்றில் அதிகப்படியான வெள்ளம் சென்றதால் பண்ருட்டி மற்றும் கடலுார் வட்டங்களில் உள்ள பெண்ணையாற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீரானது ஆற்றின் கரைகளை ஒட்டிய கிராமங்கள் மற்றும் விளை நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தடுப்பு சுவர் பணி
வெள்ளம் ஊருக்குள் புகாமல் இருக்க பெண்ணையாற்றில் பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் முதற்கட்டமாக மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி வரை நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 9.90 கோடி ரூபாய் மதிப்பில் 160 மீ., நீளம் கான்கிரீட் தடுப்பு சுவரும், 575 மீ., அகலத்திற்கு சரிவுச்சுவர் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதேப் போன்று, நகரம் மற்றும் கிராமங்களில் பெய்கின்ற மழைநீர் வடிவதற்கு வடிகால் மதகு அமைத்தல், 2,100 மீ., துாரம் பெண்ணையாற்றின் வலது புற கரை பலப்படுத்தும் பணி, ஆற்றின் உட்பகுதியில் உள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய டெக்னிக்
தற்போது, ஓரளவு மணல் திட்டுகளை அகற்றி தெற்கு கரையோரம் பலப்படுத்தும் பணிகள் நடந்தன. இவற்றை முழுமையாக அகற்ற கால அவகாசம் கூடுதலாக தேவைப்படும். இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் திட்டை முழுமையாக அகற்றுவதற்கு பதிலாக பெண்ணையாற்றின் மையத்தில் 5 அடி ஆழம் வரை புதிய டெக்னிக்காக மணல் அள்ளி வாய்க்கால் போல் வெட்டியுள்ளனர்.இப்பணி இதுவரை 1,200 மீ., துாரத்திற்கு நடந்துள்ளது. மீதமுள்ள பகுதிகளும் ஆழப்படுத்திவிட்டால் வெள்ளக் காலங்களில் தண்ணீர் இதன் வழியாக வேகமாக ஓடும்போது, மணல் திட்டுகள் கரைந்து கடலுக்குள் சென்று விடும். பின், வெள்ள நீர் சரியான பாதையில் ஓடிச்சென்று கடலில் கலக்கும். விரைவில் கரை பலப்படுத்தும் பணி துவங்க உள்ளது.
விடியல் ஆளுங்க கிட்டே சொன்னா துப்புரவா க்ளீன் பண்ணிக் குடுத்திருப்பாங்களே...