இடைத்தரகர்களுக்கு இடமில்லை தாலுகா அலுவலகத்தில் போஸ்டர்
விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இடைத்தர்கர்களுக்கு இங்கே இடமில்லை என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் துறை, தேர்தல் பிரிவு, சமூக பாதுகாப்பு, ஆதிதிராவிடர் நலன், பட்டா சிட்டா அடங்கல் மற்றும் ஆதார், இசேவை உள்ளிட்டவை இயங்குகின்றன. மேலும், கிளைச்சிறையும் உள்ளது. தினசரி நுாற்றுக்கணக்கான கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிராமங்களில் இருந்து வரும் பயனாளிகளை குறிவைக்கும் மோசடி நபர்கள், வருவாய்த்துறை சம்பந்தமான சான்றுகளை விரைவில் பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், தாலுகா அலுவலக வளாகம் முழுவதும், 'இடைத்தர்களுக்கு இங்கே இடமில்லை' என்றும், 'அனைத்து வகையான சான்றுகளும் இணையவழியில் வழங்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் வெளி நபர்கள் எவரையும் தொடர்பு கொள்ள வேண்டாம்.மேலும், அலுவலக வளாகத்திற்குள் வெளி நபர்கள் தேவையின்றி இருந்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்ற வாசகத்துடன் சிறிய அளவிலான பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு நிலவியது.